இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசின் புதிய கொள்கையின்படி, இந்தியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை அல்லது உலகக்கோப்பை போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்டு வீரர்களைப் போலவே பாகிஸ்தான் வீரர்களும் இந்தியா வந்து விளையாட இனி எவ்விதத் தடையுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, இந்தியாவில் நடக்கும் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்கலாம், ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான ‘இருதரப்புத் தொடர்கள்’ (Bilateral Series) இப்போதைக்கு நடைபெறாது.
கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடந்தன. அதேபோல இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையின் போது பாகிஸ்தான் இந்தியா வர மறுத்ததால் இலங்கை மற்றும் பிற நாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
