சமீபகாலமாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாலில் கலப்படம் செய்யப்பட்டதன் விளைவாக, அது காய்ச்சிய பிறகு பால் போல இல்லாமல், சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளாக மாறியுள்ளது.

புனே மாவட்டம் பாடாஸ் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் அவ்ஹாத் என்பவர், அங்குள்ள ஒரு இனிப்பு விற்பனையகத்தில் பால் வாங்கியுள்ளார். கோடைக்காலம் என்பதால் பாலைக் கெட்டுப் போகாமல் இருக்க முதலில் குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்த அவர், பின்னர் அதைக் காய்ச்சியுள்ளார். அப்போது பால் திரிந்து போயுள்ளதாக அவர் நினைத்தார். ஆனால், அதை உற்றுப் பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது.

பாலில் பெரிய கட்டிகள் உருவாகி இருந்ததைக் கண்ட அவ்ஹாத் அதிர்ச்சியடைந்தார். அந்தப் பிளாஸ்டிக் போன்ற பொருளை இழுத்தபோது, அது ‘சூயிங்கம்’ போல நீண்டுள்ளது. பாலில் இத்தகைய வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அவ்ஹாத் தனது அண்டை வீட்டாருக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது, பாலில் பிளாஸ்டிக் துகள்கள் போன்ற கட்டிகள் இருப்பதை உறுதி செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

 

இத்தகைய கலப்படம் செய்யப்பட்ட பாலை மக்கள் குடித்தால் அவர்களின் உடல்நிலை என்னவாகும்? இதுபோன்ற உயிரைக் குடிக்கும் செயல்களில் ஈடுபடும் கடைகள் மற்றும் நபர்கள் மீது அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்ஹாத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.