பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்ச் பகுதியில், ஒரு வினோதமான காதல் நாடகம் அரங்கேறியுள்ளது. தனது மனைவியையே மற்றொரு பெண் அதாவது காதலி என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவரைச் சந்திக்க வந்த கணவன் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். அதாவது நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சோனி திரிபாதி என்பவருக்கும், பிரபுதத் திரிபாதி என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 5 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகச் சோனியை அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனால் அவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சோனி தனது கணவரின் குணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் திட்டமிட்டார். இன்ஸ்டாகிராமில் புதிய ஐடி உருவாக்கி கணவருடன் பழகத் தொடங்கினார். பிரபுதத் அந்தப் பெண் தனது மனைவிதான் என்று அடையாளம் தெரியாமல், அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். ஹோட்டலில் சந்திக்க வற்புறுத்திய பிரபுதத்தை, சோனி லாவகமாகத்  கோவிலுக்கு வரும்படி அழைத்தார்.

மே 2-ம் தேதி கோவிலுக்கு வந்த பிரபுதத், அங்கு வந்தது தனது மனைவிதான் என்று தெரிந்ததும் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியுள்ளார். தகவலறிந்த 112 அவசரக்கால போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுதத்தை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.