கேரள அரசியல் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை வாரிக் குவித்து காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, கேரளாவில் புதிய சாதனை படைத்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), இம்முறை வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான அலை மற்றும் பல்வேறு ஊழல் புகார்கள் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதுவரை கேரள சட்டமன்றத்தில் ஒரு இடத்திற்கு மேல் வெற்றி பெறாத பாஜக, இம்முறை திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம், கழக்கூட்டம் மற்றும் சாத்தன்னூர் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கிறது. தற்போது மூன்று முக்கியத் தலைவர்கள் இந்த ரேசில் முன்னிலையில் உள்ளனர். ரமேஷ் சென்னிதலா (69): நீண்ட கால அரசியல் அனுபவம் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான உறவு கொண்டவர். முன்னரே உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குப் பலம்.
கே.சி. வேணுகோபால் (63): அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், டெல்லி தலைமையின் ஆசி இவருக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வி.டி. சதீசன் (62): சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பினராயி விஜயனைத் திணறடித்தவர். துடிப்பான செயல்பாடும், இளைஞர்களின் ஆதரவும் இவருக்குப் பக்கபலமாக உள்ளன.
மேலும் தேசிய அளவில் பெரும் ஆளுமையாகக் கருதப்படும் சசி தரூர், முதல்வர் பதவிக்கு வரக்கூடும் என்று பேச்சு எழுந்தாலும், கட்சிக்குள்ளே இருக்கும் சில எதிர்ப்புகள் மற்றும் உள்ளூர் அரசியல் எதார்த்தங்கள் காரணமாக அவரது வாய்ப்பு மங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
