தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய ‘ஜெயண்ட் கில்லராக’ உருவெடுத்துள்ளார் அவிநாசி தொகுதியின் தவெக வேட்பாளர் கமலி. இத்தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகனைத் தோற்கடித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னிலை வகித்து வந்த கமலி, இறுதிக்கட்ட சுற்றுகளின் முடிவில் எல்.முருகனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியைத் தன்வசமாக்கினார்.

​வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமலி, “இந்த மாபெரும் வெற்றி எங்களது தலைவர் தளபதி விஜய்யின் முகத்திற்காகக் கிடைத்தது. மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையே இன்று என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த மிகப்பெரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அவிநாசி தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் செய்வதே எங்களது முதல் வேலை. இது மக்களின் வெற்றி, தளபதியின் வெற்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஒரு மத்திய அமைச்சரைத் தனது முதல் தேர்தலிலேயே வீழ்த்தியுள்ள கமலியின் இந்த வெற்றி, தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக-வின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.