ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ‘வெறிபிடித்த’ அணில் கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த காரணமும் இல்லாமல் திடீரென தாக்கி வருகிறது.
அந்த பகுதியில் இந்த அணில் கூடு கட்டியிருப்பதாகவும், தனது எல்லைக்குள் வருபவர்களை ஆக்ரோஷமாக கடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அந்த பாதையில் நடக்கவே அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள். இந்த ‘டெரர்’ அணிலை பிடிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
ஏற்கனவே இரண்டு முறை மீட்புக் குழுவினர் வந்து வெவ்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தும், அந்த தந்திரமான அணில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டது. இதுவரை துறைத் தலைவர் உட்பட 20 பேரை இந்த அணில் பதம் பார்த்துள்ளதால், அணில் எங்கே தென்பட்டாலும் உடனே அதிகாரிகளுக்கு தகவல் சொல்லும்படி கடுமையான உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த ஒரு குட்டி அணிலால் இப்போது மொத்த பல்கலைக்கழகமே பீதியில் உறைந்து போயுள்ளது.
