90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மோகினி, சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘கண்மணி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக தன்னை நீச்சல் உடையில் நடிக்கும்படி இயக்குனர் வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த உடையில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லாததால் தான் அழுது அடம் பிடித்ததாகவும், அந்த காலத்தில் நடிகைகளுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாததால் மிகுந்த அசெளகரியத்திற்கு உள்ளானதாகவும் மோகினி உருக்கமாகக் கூறியுள்ளார்.
இயக்குனர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட இடைவிடாத அழுத்தத்தின் காரணமாக, வேறு வழியின்றி ஒன்றரை நாட்கள் அந்த உடையில் நடித்துக் கொடுத்ததாக மோகினி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மீண்டும் ஊட்டியில் அதே போன்ற ஒரு காட்சியில் நடிக்கும்படி கேட்டபோது, “இது உங்கள் பிரச்சனை, என்னால் முடியாது” என்று தான் உறுதியாக மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
1994-ல் வெளியான ‘கண்மணி’ திரைப்படம் மோகினியின் நடிப்புக்காகப் பேசப்பட்டாலும், திரைமறைவில் இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியில் தான் அவர் நடித்திருந்தார் என்பது தற்போது இந்த வெளிப்படையான பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது. இது சினிமாத்துறையில் நடிகைகள் சந்திக்கும் சவால்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
