தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தான் பணியாற்றிய இசையமைப்பாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்குப் பதிலடியாக பாடகி சுசித்ரா விடுத்துள்ள அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்வாகதா, “நான் பணியாற்றிய ஒரு இசையமைப்பாளர் எனது உழைப்பிற்கு ஊதியம் வழங்காமல், என்னிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டார். ஒருநாள் தனது ஸ்டூடியோவிலேயே என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டு மிரட்டினார். என்னைப்போல பல பெண்களை அவர் சீரழித்துள்ளார் என கண்ணீர் மல்கத் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்போது திரையுலகை விட்டு விலகி ரிஷிகேஷில் வசித்து வருகிறார்.
ஸ்வாகதாவின் இந்த புகாருக்கு ஆதரவு தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கமெண்ட்ஸ் பகுதியிலேயே மக்கள் அவர் பெயரைச் சொல்லிவிட்டார்கள். காவல்துறை நினைத்தால் சில நிமிடங்களில் அவரைப் பிடித்துவிடலாம் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளருக்கு ஆதரவாக பாடகி சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது பாலியல் வன்கொடுமை அல்ல, இது ஒரு தோல்வியடைந்த காதல் உறவு (Toxic Relationship). இருவரும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தனர். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பிறகு, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் ஸ்வாகதா குற்றம் சாட்டுவது தவறு. தங்கை மாயா புகழடைவதைப் பார்த்து பொறாமைப்பட்டு ஸ்வாகதா இப்படிச் செய்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், ஸ்வாகதா மறைத்த அந்த இசையமைப்பாளரின் பெயரை சுசித்ரா தனது பதிவில் டேக் (Tag) செய்து, “ப்ரோ, அமைதியாக இருக்க வேண்டாம், உங்கள் தரப்பு உண்மையைச் சொல்லுங்கள்,” என அவருக்கு தைரியம் கொடுத்துள்ளார். பாடகி ஒருவரே மற்றொரு பாடகியின் பாலியல் புகாரை ‘காதல் தோல்வி’ எனச் சித்தரித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
