தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ‘உள்’ விவகாரங்கள் குறித்துத் தலைவர் திருமாவளவன் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தேர்தல் சமயத்தில் ஒரு சில தொகுதிகளில் விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு (திமுக கூட்டணி) முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தலைமைக்குப் புகார்கள் குவிந்துள்ளன. இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்குக் காரணமானவர்கள் குறித்த தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து 234 தொகுதிகளிலும் விசிகவினர் முழு மூச்சாகப் பணியாற்ற வேண்டும் என தான் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததாகவும், அந்த உத்தரவை மீறி மெத்தனமாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் களையெடுப்பு இருக்கும் எனத் தெரிகிறது. திருமாவளவனின் இந்தத் திடீர் எச்சரிக்கை, கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வைக் குறைக்கவும், கட்சிக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
