தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தவெக தலைவர் விஜய் குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார். தனக்கு விஜய் அண்ணா என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், அவர் அரசியலுக்கு வர வேண்டிய எந்தத் தேவையும் இல்லாத போதும், மக்கள் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மக்களுக்குத் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விஜய்யின் அந்த உயரிய எண்ணத்தை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ​மேலும் பேசிய அவர், கேரளாக்காரர்களான தனக்கும், தனது நண்பர்களுக்கும் தமிழ்நாட்டில் ஓட்டு இல்லையே என்பது பெரும் வருத்தமாக இருப்பதாகவும், தனது நண்பர்கள் அனைவரும் விஜய் ரசிகர்கள் என்றும் தெரிவித்தார்.

விஜய் இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாகவும், ஊடகங்களைப் பார்க்கும்போது மக்களுக்கும் அதே ஆசை இருப்பது தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். “நிஜமான வெற்றியை மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று அடக்கத்துடன் பேசிய ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த வீடியோ தற்போது தவெக தொண்டர்களிடையே வைரலாகி வருகிறது.