தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்றால், அதற்கு விசிக எடுத்த உறுதியான நிலைப்பாடு மற்றும் பொறுப்புணர்வு தான் முக்கிய காரணம் என அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். “மாற்றம்” என்ற பெயரில் தாங்கள் மட்டும் வேறு ஒரு அரசியல் முடிவை எடுத்திருந்தால், இன்று தமிழக அரசியல் சூழலே தலைகீழாக மாறியிருக்கும் என அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

​தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது, கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டு கூட்டணியைப் பலவீனப்படுத்தாமல், திமுக கொடுத்த இடங்களை ஏற்றுக்கொண்டு முழு மூச்சுடன் பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். விசிக-வின் இந்த அணுகுமுறைதான் திமுக மீண்டும் அரியணையில் அமர வழிவகை செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு திமுக கூட்டணிக்குள் ஒருவிதமான சலசலப்பையும், அதே சமயம் விசிக தொண்டர்களிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.