தமிழக அரசியல் களம் தற்போது பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சென்னையின் பல தொகுதிகளில் அக்கட்சியின் வாக்கு வங்கி கடுமையாகச் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் கோட்டையாகக் கருதப்பட்ட தலைநகரிலேயே அதிமுக தன் செல்வாக்கை இழந்து வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் கவர்ந்து வரும் வேளையில், அந்தப் புதிய அரசியல் மாற்றத்தைச் சரியாகக் கையாளத் தவறியதே அதிமுகவின் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், தற்போதைய அரசியல் சூழல் “திமுக vs தவெக” என்ற இருமுனைப் போட்டியை நோக்கி நகர்ந்து வருவதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பிரதான எதிரியாகத் தன்னைக் காட்டிக்கொள்வதில் விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அந்த இடத்தை இழந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் “திமுக vs அதிமுக” என்ற வழக்கமான திராவிட அரசியல் களம் சிதைந்துவிடாமல் தடுக்க EPS தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. இந்தத் தடுமாற்றம் தொடர்ந்தால், அதிமுக தனது வாக்கு வங்கியைத் தற்காத்துக் கொள்வதே பெரும் சவாலாக மாறும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
