சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று பஞ்சாப் சட்டப்பேரவையில் கூட்டப்பட்ட சிறப்பு அமர்வு, வழக்கத்திற்கு மாறாக ஒரு போர்க்களமாக மாறியது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் அவைக்கு வந்ததாக காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் தினச் சிறப்பு விவாதத்தின் போது, முதலமைச்சர் பகவந்த் மானின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததாகக் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் மதுபோதையில் இருப்பதாகவும், அவரது பேச்சில் நிதானம் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின.
Opposition members on Friday alleged that Punjab CM Bhagwant Mann appeared intoxicated in the Assembly.
Leader of Opposition Partap Singh Bajwa demanded alcohol tests for all MLAs present to clear the air.#Punjab #BhagwantMann #Congress #AamAadmiParty #AAP pic.twitter.com/zbm9JqqOOp
— Deccan Herald (@DeccanHerald) May 1, 2026
முதலமைச்சர் உட்பட அவையில் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உடனடியாக ‘ப்ரீத் அனலைசர்’ (Breath Analyser) எனப்படும் மது பரிசோதனை மற்றும் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டால் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி (AAP) உறுப்பினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அவை கடும் அமளிக்குள்ளானது.
முதலமைச்சருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய சபாநாயகர் மறுத்ததைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஆம் ஆத்மி அமைச்சர்கள் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர். தொழிலாளர்களின் கூலியை உயர்த்துவது போன்ற முக்கிய விஷயங்களைப் பேசவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் இத்தகைய தரம் தாழ்ந்த புகார்களைக் கூறுவதாக அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
முதலமைச்சர் பகவந்த் மான் மீது ஏற்கனவே இத்தகைய புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று சட்டப்பேரவையிலேயே இத்தகைய சர்ச்சை வெடித்துள்ளது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. “ஜனநாயகத்தின் கோவிலான சட்டப்பேரவைக்கு குடிபோதையில் வருவது மிகப்பெரிய அவமானம்” என பா.ஜ.க தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
