சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியிடம் காவலர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

அந்த மாணவியை மிரட்டிய அந்த காவலர், தமக்கு பணம் தரவில்லை என்றால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விடுவேன் என்று பயமுறுத்தியுள்ளார்.

இதனால் கடும் அச்சமடைந்த அந்த மாணவி, வேறு வழியின்றி அருகில் இருந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்று 8,000 ரூபாய் பணத்தை எடுத்து அந்த காவலரிடம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தார். மாணவியின் புகாரை அடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அத்துமீறலில் ஈடுபட்ட அந்த காவலரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.