கேரளாவில் தம்பியை கொலை செய்த பிறகு, அதனை நேரில் பார்த்த தாயையும் ஆத்திரத்தில் கொன்று, இருவரது உடல்களையும் வீட்டிற்குள்ளேயே புதைத்த நபரின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அம்பூரி பகுதியில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான குற்றவாளி, குடும்ப தகராறு காரணமாக முதலில் தனது தம்பியை அடித்துக் கொன்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த தாய் சத்தமிட்டதால், விபரம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் தாயையும் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இதனால் கொலை செய்த பின்னர் எவ்வித பதற்றமும் இன்றி, வீட்டின் ஒரு அறையில் குழி தோண்டி இருவரது உடல்களையும் அவர் புதைத்துள்ளார். நீண்ட நாட்களாக அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும், அக்கம் பக்கத்தினர் தாய் மற்றும் மகனை காணவில்லை என சந்தேகம் அடைந்ததாலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குற்றம் செய்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுத்தது. இறுதியில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். வீட்டின் தரையைத் தோண்டி உடல்களை மீட்ட போலீசார், அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.
