கோடைக்கால வெப்பத்திலிருந்தும், வெப்பக் காற்றிலிருந்தும் தப்பிக்க நம் முன்னோர்கள் சொல்லும் ஒரு பிரபலமான வழிமுறை பாக்கெட்டில் ஒரு சிறிய வெங்காயத்தை வைத்துக்கொள்வது. கிராமப்புறங்களில் இன்றும் இந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால், அது உடலில் ஏறும் அதிகப்படியான வெப்பத்தை உறிஞ்சிவிடும் என்றும், அதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால், மருத்துவ ரீதியாகவோ அல்லது அறிவியல் பூர்வமாகவோ இந்தத் தகவலுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. வெங்காயம் காற்றில் உள்ள வெப்பத்தையோ அல்லது உடலில் உள்ள வெப்பத்தையோ நேரடியாக உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதற்கு அறிவியல் பூர்வமான நிரூபணங்கள் எதுவும் இதுவரை இல்லை.
மேலும் உண்மையில், கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க வெங்காயத்தை பாக்கெட்டில் வைப்பதை விட, அதை உணவில் சேர்த்துக் கொள்வதே சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் சில வேதிப்பொருட்கள் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சியைத் தரக்கூடியவை.
இது குறிப்பாக, கோடையில் மோர் சாதத்துடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சாப்பிடுவது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும். எனவே, வெறும் நம்பிக்கையை மட்டும் சார்ந்து இருக்காமல், கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது மற்றும் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது போன்ற அறிவியல் பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே உஷ்ண பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
