உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில், திருமண அழைப்பிதழ் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது உறவினரின் வீட்டு வாசலை வெல்டிங் மெஷின் மூலம் இரும்புத் தூண்களைக் கொண்டு சீல் வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகன் வீட்டார் திருமண ஊர்வலத்தை முடித்துவிட்டு மணப்பெண்ணுடன் வீடு திரும்பியபோது, பிரதான கதவு முழுமையாக அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் திருமண வீட்டிற்குச் சொந்தமான நிலம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பப் பகை மற்றும் தமக்கு முறைப்படி அழைப்பு விடுக்காததே அந்த நபர் இத்தகைய விபரீத செயலில் ஈடுபடக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சிக்கலால் மணமகள் வீட்டிற்குள் நுழைய முடியாமல் நீண்ட நேரம் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இறுதியாக, காவல்துறையினரின் முன்னிலையில் அந்த இரும்புத் தூண்கள் அகற்றப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மணப்பெண் ஒருவழியாக வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
