சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றியது. இது தொடர்பான மறுபரிசீலனை விசாரணை நேற்று நடைபெற்றபோது, மத சுதந்திரம் மற்றும் ஆச்சாரங்கள் குறித்து நீதிபதிகள் மிக முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, ஐயப்பனின் உண்மையான பெண் பக்தர்கள் 50 வயது வரை சபரிமலை செல்லக் காத்திருப்பார்கள் என்றும், சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மத வரலாற்றையும் கலாச்சாரத்தையும் புறக்கணிக்க முடியாது என்றும் நீதிபதி நாகரத்னா கூறினார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நம்புபவர் அந்தத் தெய்வத்தின் வழிபாட்டு முறைகளை எப்படி மீற முடியும் என்றும், பொதுவான நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுவது மத அடையாளத்தையே சிதைத்துவிடும் என்றும் மற்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
