உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் வாழ அனுமதி கோரி, செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சஸ்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லுட்சன் சாலையில் உள்ள உயரமான கோபுரத்தில் ஏறிய சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், கீழே இறங்க மறுத்து அடம் பிடித்தார்.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூஜா என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்ணிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாததால், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் வாழ விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் இருந்து கிளம்பியவர், வழியில் இருந்த கோபுரத்தின் மீது ஏறி சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடைசியாகப் போலீசார் அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்கிய பின்னரே அவர் கீழே இறங்கி வந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
