சென்னை நங்கநல்லூரில் உள்ள பிரபல பட்டுச் சேலை விற்பனை நிலையத்தின் உரிமையாளரும், சமூக வலைதளப் பிரபலமுமான நாகலட்சுமி, குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நங்கநல்லூரை சேர்ந்தவர் நாகலட்சுமி (42). இவர் ‘ஸ்ரீ சாய் சில்க்ஸ்’ (Sree Sai Silks) என்ற பெயரில் பட்டுச் சேலை நிறுவனத்தை நடத்தி வந்தார். குறிப்பாக, ‘ஒன் மினிட் சாரி’ (1-Minute Saree) எனப்படும் எளிதில் உடுத்தக்கூடிய சேலைகளை அறிமுகப்படுத்தி, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார். குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக விளங்கிய இவர், தனது இரண்டு மகன்களையும் மருத்துவக் கல்வி படிக்க வைத்து வந்தார்.
💔 This one breaks my heart completely.
Nagalakshmi, the soul of Sree Sai Silks, was killed in her own home yesterday by her husband Subramanian. He then ended his own life.
He had no job, drank a lot, and kept demanding money from her. She was the one running the business,… pic.twitter.com/ambARuQzkI
— Aparajite (@amshilparaghu) April 29, 2026
நாகலட்சுமியின் கணவர் சுப்பிரமணியன் (52) வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி பணப் பிரச்னை மற்றும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து மதுரையில் வசித்து வந்த சுப்பிரமணியன், பத்து நாட்களுக்கு முன்புதான் மீண்டும் சென்னைக்கு வந்து நாகலட்சுமியுடன் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், வீட்டில் இருந்த அரிவாளால் நாகலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், கல்லூரியில் இருந்த தனது இளைய மகனுக்கு, “நானும் அம்மாவும் இனி வீட்டில் இருக்க மாட்டோம், உனக்குச் சாப்பாடு எடுத்து வைத்திருக்கிறேன், வந்து சாப்பிடு” என வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, சுப்பிரமணியன் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு வந்து பார்த்த மகன், பெற்றோர் இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனி ஒரு பெண்ணாக நின்று போராடி, தொழிலில் முன்னேறிய நாகலட்சுமி, கணவராலேயே கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடைசியாகப் பதிவிட்ட வீடியோவை அவரது ரசிகர்கள் கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.
