தனிநபர் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற விதிமுறை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்களுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனை செய்ததாக ஒரு நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சம்பந்தப்பட்ட நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “தனிநபர் தனது கைவசம் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ளது என்பது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் (TASMAC) மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். புதுச்சேரி அல்லது பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு இந்தச் சலுகை கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், வெளிமாநில மதுபானத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.