புது வேலைக்குச் செல்லும் முதல் நாள் என்பது யாருக்குமே சற்று தயக்கமும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான நேரமும் தேவைப்படும் நாளாகத்தான் இருக்கும். ஆனால், அமெரிக்காவில் ஃபாஸ்ட் புட் (Fast-food) உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, வேலை பழகிக் கொள்ளக் கூட நேரம் கொடுக்காமல், சேர்ந்த 3 மணி நேரத்திலேயே முதலாளி அவரை வேலையை விட்டுத் தூக்கிய விசித்திர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் அந்த இளைஞர் பகிர்ந்துள்ள பதிவின்படி, தனக்கு ஃபாஸ்ட் புட் கடைகளில் வேலை செய்த எந்தவொரு முன் அனுபவமும் இல்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துத்தான் அவர் வேலையில் சேர்ந்துள்ளார். முதல் ஒரு மணி நேரம் அமைதியாகச் செல்ல, பர்கர் எப்படித் தயாரிப்பது என்பதை வேடிக்கை பார்த்துப் பழகியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியதும், பர்கர்களை பேக் செய்யும் வேலையை இவரிடம் கொடுத்துள்ளனர்.
முதல் நாள் என்பதால் பர்கர்களை வேகமாக பேக் செய்ய அவர் சற்று தடுமாறியுள்ளார். வேகமாக வேலை செய்யும்படி முதலாளி மிரட்ட, “பழக கொஞ்ச நேரம் ஆகும்” என்று இவர் கூறியுள்ளார். ஆனால், வெறும் 4 வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் கொடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த இளைஞரைத் தனியாக அழைத்த முதலாளி, “இந்த வேலை உனக்குச் செட் ஆகாது… எங்களுக்குப் பார்த்த உடனே பத்திக்கிற மாதிரி ஆளுங்கதான் வேணும்.
சனிக்கிழமை வர்ற கூட்டத்தை உன்னால சமாளிக்க முடியாது” என்று கூறி, 3 மணி நேரத்திற்கான சம்பளத்தைக் கையில் கொடுத்து உடனடியாக வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் “இப்போதெல்லாம் ஆரம்பக்கட்ட ஊழியர்களுக்குக் கற்றுக்கொள்ளக் கூட முதலாளிகள் நேரம் கொடுப்பதில்லையா?” என்ற காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
