மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா, தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மக்களவையில் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (352 வாக்குகள்) இல்லாததால் இது நிறைவேற்றப்படவில்லை.

வெறும் இட ஒதுக்கீடு மட்டுமில்லாமல், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்துவது மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற கோரிக்கைகள் இதில் சேர்க்கப்பட்டதே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்பி சசி தரூர் தன்னிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானதாக இருக்கலாம், ஆனால் எந்தப் பெண்ணும் என்னை (சசி தரூர்) பெண்களுக்கு எதிரானவராகக் கருத மாட்டார்கள்” என்று கூறியதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என்பதை ஒரு வகையில் சசி தரூரே ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.