பாட்னாவில் 10 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி லாவகமாக மறைத்திருந்த ஆதாரத்தை ஆட்டு முடியின் உதவியுடன் கண்டுபிடித்த போலீஸார், குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர். அதாவது பாட்னா  அருகே வசிக்கும் 10 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடி வந்த நிலையில், அங்குள்ள ஒரு குறுகிய சந்தில் குப்பைக் கிடங்கிற்கு அருகில் போர்வை ஒன்றால் சுற்றப்பட்ட நிலையில் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சிறுமியின் உடல் சுற்றப்பட்டிருந்த போர்வையை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் ஆட்டு முடிகள் ஒட்டியிருந்தது கண்டறியப்பட்டது. கொலையாளி அந்தப் பகுதியிலேயே ஆடு வளர்ப்பவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சந்தில் இருந்த வீடுகளை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டின் வாசலில் 4-5 ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் சந்தேகம் தீராத போலீஸார், பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு ரஞ்சித் என்ற நபர் மின்விசிறி கூட இல்லாமல் வியர்வையில் நனைந்தபடி பதுங்கியிருப்பது தெரிந்தது. ஜன்னல் வழியாக போலீஸாரின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்ததும் உறுதியானது.

கைது செய்யப்பட்ட ரஞ்சித் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “தவறான எண்ணத்துடன் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்றேன். அவர் கூச்சலிடவே, அங்கிருந்த அம்மிக்கல்லால் சிறுமியின் தலையில் அடித்துக் கொன்றேன். சடலத்தை நாள் முழுவதும் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்து விட்டு, நள்ளிரவு 2 மணியளவில் போர்வையில் சுற்றி ஏரியில் வீசச் சென்றேன். ஆனால் போலீஸ் ரோந்து வாகனத்தைப் பார்த்ததும் பயந்துபோய், குப்பைக் கிடங்கில் வீசிவிட்டு வந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி ரஞ்சித்தை கைது செய்த போலீஸார், அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர். குற்றவாளி எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், ஏதோ ஒரு தடையத்தை விட்டுச் செல்வான் என்பதற்கு இந்த ஆட்டு முடி ஆதாரமே சாட்சி என போலீஸார் தெரிவித்தனர்.