சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, விசா விதிமுறைகளை மீறி மதப்பிரசாரத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் மூன்று பேர், வரும் மே 10-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற புனே காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 53, 65 மற்றும் 66 வயதுடைய மூன்று பேர், கடந்த ஏப்ரல் 19 முதல் 21-ஆம் தேதிக்குள் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் மும்பையில் தங்கியிருந்துவிட்டு, பின்னர் புனேவுக்குச் சென்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி, புனேவின் சுக்ரவார் பெத் பகுதியில் இவர்கள் மூவரும் பொதுமக்களுக்கு மத ரீதியிலான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு தனியார் வாடகை கார் ஓட்டுநரிடம் ஆங்கிலம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் அச்சிடப்பட்ட கிறித்தவ மதப் பிரச்சாரத் தாள்களை வழங்கியுள்ளனர். மேலும், அவரிடம் தங்கள் மதம் குறித்துப் பேசி பிரசாரம் செய்யவும் முயன்றுள்ளனர்.
அப்பகுதியில் தேர்தல் பேரணி நடைபெற்று வந்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் அந்த கார் ஓட்டுநர் இதுகுறித்துத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த வெளிநாட்டினரை அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் அதிகளவிலான மதப் பிரசாரத் தாள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
சுற்றுலா விசா பெற்று இந்தியா வருபவர்கள், இங்கு மதப் பிரசாரத்திலோ அல்லது அது சார்ந்த பிற நடவடிக்கைகளிலோ ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக புனே வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் (FRO) நடத்திய விசாரணையில், அவர்கள் விசா விதிமுறைகளை அப்பட்டமாக மீறியது உறுதியானது.
இதுகுறித்து புனே துணை போலீஸ் ஆணையர் சந்தீப் பாஜிபாகரே கூறுகையில், “சுற்றுலா விசா விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட மதம் குறித்து பிரசாரம் செய்ததற்காக அந்த மூன்று பேருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது இதுவரை வேறு எந்த வழக்குகளும் இல்லை. வரும் மே 10-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
