அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், இரு வளர்ந்த நபர்களுக்கு இடையே பரஸ்பர சம்மதத்துடன் நீண்டகாலமாகத் தொடரும் உடல் ரீதியான உறவை ‘பாலியல் வன்புணர்வு’ என்று கருத முடியாது என்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும் நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்திற்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பதை நீதிபதி ராஜீவ் லோச்சன் சுக்லா சுட்டிக்காட்டினார்.

மேலும் துப்பாக்கி முனையில் மிரட்டி வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, பாதிக்கப்பட்ட பெண் 2022 முதல் அந்த நபருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறிய வாக்குமூலத்தோடு ஒத்துப்போகவில்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விதவை என்பதும், அவருக்கும் மனுதாரருக்கும் இடையே நீண்டகாலமாகத் காதல் உறவு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவர் மற்றும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலங்களில், அவர்கள் இருவரும் விருப்பத்துடன் உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதனால் பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் இத்தகைய உறவுகளில் விரிசல் ஏற்படும்போது, அவற்றைப் பழிவாங்கும் நோக்கில் பாலியல் வன்புணர்வு வழக்குகளாக மாற்ற முடியாது என்பதை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. மனுதாரருக்குக் குற்றப் பின்னணி ஏதும் இல்லாததையும், காவல்துறையின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் இந்த முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.