15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகையே வியக்க வைத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், பேட் கமின்ஸ் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்ட அவர், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அசுர வளர்ச்சிக்குத் தனது பெற்றோரின் தன்னலமற்ற தியாகமே காரணம் என்று வைபவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது பயிற்சிக்காகத் தனது தாய் நாளொன்றுக்கு வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே உறங்கி, அதிகாலை 2 மணிக்கே எழுந்து தன்னைத் தயார் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கிரிக்கெட் கனவை நனவாக்கத் தந்தை தனது வேலையையே விட்டுவிட்டு முழு நேரமாகத் துணையாக இருந்ததாக வைபவ் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். பெற்றோரின் நம்பிக்கையும் உழைப்புமே தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
