தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், சிக்கன் குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தன் கணவனை வெட்டிக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கூலித் தொழிலாளியான கோதண்ட சிவாஜி என்பவர், தனது மனைவி லட்சுமியிடம் சிக்கன் குழம்பு சமைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், குடும்பத்தின் வறுமை மற்றும் வாழ்க்கைச் சூழல் காரணமாக அவர் சமைக்க மறுத்ததாகத் தெரிகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த லட்சுமி வீட்டில் இருந்த அரிவாளால் சிவாஜியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவாஜி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மற்றும் ஒரு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாத நிலையில், உணவு தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு ஒரு உயிரைப் பறித்ததோடு, இரண்டு பச்சிளம் குழந்தைகளை அனாதையாக்கியுள்ளது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லட்சுமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.