தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷேக் பேட் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் கால்நடை மருத்துவமனை, நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்குச் செல்லப் பிராணிகளை அழைத்து வரும் வசதி படைத்தவர்களைக் குறிவைத்து ஒரு மிகப்பெரிய ‘ரத்த மாஃபியா’ கும்பல் செயல்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆரோக்கியமான தெரு நாய்களைப் பிடித்து வந்து, அவற்றின் ரத்தத்தை முழுமையாக உறிஞ்சி ரத்த வங்கிகளில் சேமித்து வைப்பதே இவர்களின் வேலையாக இருந்துள்ளது. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் வளர்ப்பு நாய்களுக்கு “ரத்தம் குறைவாக உள்ளது” எனப் பொய் கூறி, ஏற்கனவே சேமித்து வைத்த தெரு நாய்களின் ரத்தத்தை ஒரு பாக்கெட் 18,000 முதல் 25,000 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.
ரத்தம் எடுக்கப்பட்ட பல தெரு நாய்கள் ரத்த சோகையால் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கசியவே, விலங்குரிமை ஆர்வலர் மேனகா காந்தி அளித்த புகாரின் பேரில் விலங்குகள் நல வாரியம் தற்போது அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது. “செல்லப் பிராணிகள் மீதான அன்பை வைத்து இப்படி ஒரு ரத்த வணிகமா?” என விலங்கு ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
