சேலம் அருகே பிளஸ்-1 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-1 பயின்று வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (23) என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த ஏழுமலை, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, ஏழுமலையின் நண்பர்களும் அந்த மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் கர்ப்பமடைந்த மாணவி, அண்மையில் மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இச்சம்பவம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தனது மகளைச் சீரழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஏழுமலை மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
