தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்தின் தேர்தல் புறக்கணிப்பு விவகாரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி கிராம மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் பல ஆண்டுகளாக நிலவிய தேர்தல் சிக்கல்களுக்கு உண்மையான சமூக மற்றும் மக்கள் தொகை காரணங்களை விளக்காமல், பட்டியலின மக்களைப் பிற சமூகத்தினர் துன்புறுத்துவது போலவும், “ஓட்டுப் போட்டால் கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன்” என வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காட்சிகள் உள்ளதாக மக்கள் குமுறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பாப்பாபட்டி கிராமத்தினர், தங்கள் கிராமத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி கறுப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவராகப் பணியாற்றி வரும் முருகானந்தம் இதுகுறித்து வேதனையுடன் பேசுகையில், தங்களது ஊர் மக்களின் பழக்கவழக்கங்களுக்கும் படத்தில் வரும் காட்சிகளுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்பு தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டபோது, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையிலேயே போராட்டங்கள் நடந்ததாகவும், ஆனால் தற்போது கடந்த பல தேர்தல்களாகப் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் சுமூகமாகத் தலைவர்களாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உண்மையை மறைத்து வன்முறையைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், தவறான சித்தரிப்புக்காக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், விஜய்யின் இந்தப் புதிய படம் கிளப்பியுள்ள சர்ச்சை தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.