தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த பார்வையும் மே 4-ம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளின் மீதே உள்ளது. நடிகர் விஜய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்தாலும், அவற்றைத் தூக்கியெறிந்துவிட்டு களத்தில் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியது வெறும் 50 மணி நேரத்திற்கும் குறைவுதான் என்றாலும், அவர் சென்ற இடங்களில் கூடிய கூட்டம் மற்ற கட்சிகளை மிரள வைத்தது. 2006-ல் விஜயகாந்த் அவர்கள் பெற்ற அந்த 8 சதவீத வாக்கு வங்கியை விஜய் இந்த முறை தகர்த்தெறிந்து, ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

​இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ‘உத்தேச அமைச்சரவை’ பட்டியலை வெளியிட்டு அதிரடி கிளப்பி வருகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் அடிபடுகின்றன. திமுக – அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளுக்கு இடையே ஒரு புதிய மாற்றத்தை விஜய் கொண்டு வருவாரா அல்லது விஜயகாந்த் போலவே தனித்து நின்று தனது பலத்தை மட்டும் நிரூபிப்பாரா என்பதுதான் தற்போது தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்வி. மே 4-ம் தேதி அன்று விஜய் எடுக்கப்போகும் ‘ஸ்கோர்’ தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றக்கூடும்.