‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இசைத்துறையில் முத்திரை பதித்த ஜேம்ஸ் வசந்தன், சமீபகாலமாகத் தனது அதிரடியான அரசியல் விமர்சனங்களால் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அவர் கடுமையாக விமர்சித்து வருவதால், அவருக்கும் தவெக-வினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள உணவகத்திற்குச் சென்ற ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜேம்ஸ் வசந்தன் தனது காரை ஒரு வீட்டின் வாசலை மறித்து நிறுத்தியிருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் பெண் உரிமையாளர் காரின் கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்துள்ளது. இதில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தமக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் வாயிலாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
