டெல்லியில் கடந்த 1995-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரின் 13 வயது மகன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுமார் 26 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி சலீம் கான் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்காப்புக் கலை ஆசிரியரான சலீம் கான், பணத்திற்காகத் தனது மாணவனையே கடத்திக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்ற நிலையில், 2000-ம் ஆண்டில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். தான் இறந்துவிட்டதாகப் பொய்யான நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, தனது அடையாளத்தை முற்றிலும் மாற்றிக்கொண்ட அவர், காசியாபாத்தில் ‘சலீம் வாஸ்திக்’ என்ற பெயரில் வலம் வந்தார்.
அங்கே ஒரு துணிக்கடையைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், யூடியூபராகவும் மாறி ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைப் பெற்று சமூக வலைதள ஸ்டாராக வலம் வந்துள்ளார்.
இவரது இந்த விசித்திரமான வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க ஒரு தயாரிப்பாளர் முன்வந்து 15 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்திருந்த நிலையில், பழைய கைரேகை மற்றும் ரகசியத் தகவல்கள் மூலம் டெல்லி போலீசார் இவரைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
ஒரு கொலையாளி 26 ஆண்டுகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி, யூடியூபராக வலம் வந்த இந்த சினிமாத்தனமான சம்பவம் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது.
