லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் முறையில் உள்ள ஆபத்துகள் குறித்து உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

திருமண வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தனது பார்ட்னர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, “பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து வாழ்ந்துவிட்டு, ஒரு குழந்தை பிறந்த பிறகு, உறவில் விரிசல் ஏற்படும்போது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு உறவு இருதரப்பு சம்மதத்துடன் இருக்கும்போது, அதை எப்படி பாலியல் குற்றமாக மாற்ற முடியும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். திருமணத்திற்கு வெளியேயான இத்தகைய உறவுகளில் உள்ள சிக்கல்களையும், பிரிந்த பிறகு ஆண்கள் மீது பழிவாங்கும் நோக்கில் புகார்கள் அளிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், லிவ்-இன் உறவுகளில் இருக்கும் ‘உள்நோக்க ஆபத்துகளை’ எச்சரித்துள்ளது.