“ஒரு சொட்டு மது இருந்தாலும் உள்ளே தள்ளுவோம்” என்று சொல்லும் அளவிற்குப் புதுச்சேரி மற்றும் கடலூர் எல்லைகளில் மதுவிலக்கு போலீசாரின் கெடுபிடி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அரசாணையின்படி, ஒருவர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற சலுகை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலவரப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க எவ்விதத் தடையும் இல்லை எனப் போலீசார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, புதுச்சேரியில் இருந்து மிகக் குறைந்த அளவான 90 மில்லி லிட்டர் மதுபானத்தை எடுத்து வந்தாலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. “அரசாணை திருத்தப்பட்டு விட்டது, இனி பழைய விதிகளைக் கூறித் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், எல்லைப் பகுதிகளில் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் மது பிரியர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய ‘ஷாக்’ செய்தியாகவே அமைந்துள்ளது.
