கொலம்பியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தனது இரண்டு வயது இரட்டை ஆண் குழந்தைகளின் தந்தை யார் என்பதை உறுதி செய்யப் பெண் ஒருவர் அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழக ஆய்வகத்திற்குச் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவைக் கண்டு மருத்துவர்களே உறைந்து போயினர்.

அந்த இரட்டை குழந்தைகளுக்குத் தாய் ஒருவரே, ஆனால் தந்தை வெவ்வேறு நபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இத்தகைய அரிதான நிகழ்வு மருத்துவத் துறையில் ‘ஹெட்டிரோபெட்டர்னல் சூப்பர்ஃபெக்குண்டேஷன்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், இது மிகவும் அரிதான ஒன்று என்றும், உலகளவில் மருத்துவக் கட்டுரைகளில் இதுவரை சுமார் 20 முறை மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு பெண் ஒரே மாதவிடாய் சுழற்சியில் இரண்டு கருமுட்டைகளை வெளியிடும்போது, அவை மிகக்குறுகிய கால இடைவெளியில் இருவேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுற்றால் மட்டுமே இத்தகைய இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிவு இப்போது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.