அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட கிடைக்காது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக தற்போது ஒரு கிளைக் கட்சியாக மாறிவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாகரிகமான அரசியலை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் தரம் தாழ்ந்து இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதற்காக அவர் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அதிமுக தனது கொள்கைகளில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிழலில் இயங்குவதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் செல்வப்பெருந்தகை சாடினார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்துகிறாரா அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டராகச் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும் என்றும், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு அக்கட்சி பலவீனம் அடைந்துவிட்டது என்றும் அவர் தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.