தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களை, திமுக நிர்வாகியும் நடிகருமான போஸ் வெங்கட் கடுமையாகச் சாடியுள்ளார். அவரது சமூக வலைதளப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் முதல்முறையாகக் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. இதில் தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் அலைமோதி வருகின்றன.
திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும், அக்கட்சிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட போஸ் வெங்கட், விஜய்யை மறைமுகமாகத் தாக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, ஆட்டோ சங்கர் ஒரு கொலைகாரன் என்றாலும், அன்று அவர் பேசுபொருளாக இருந்தார். அவரை ஆதரித்த ஒரு கூட்டமும் இருந்தது. சங்கரால் பாதிப்பு அடையாதவர்களும், சமூகப் பாதிப்பை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டவர்களுமே அவரை அப்படிக் கொண்டாடினார்கள்.
அதேபோலத்தான் தற்போதும் ஒரு முட்டாளின் வருகைக்காகச் சிலர் காத்திருக்கிறார்கள். அறிவு சார்ந்த தமிழ் சமூகத்தின் எதிரிகள் இவர்கள். ஒரு கொலைகாரனைக் கொண்டாடுவதன் மூலம் தாங்கள் யார் என்பதை அவர்கள் உணர்த்துகிறார்கள். அவர்களைத் தமிழ் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. நீங்கள் யாரை உருவாக்கினாலும், பெரியாரின் பேரன்கள் அவர்களை அடையாளம் காட்டுவார்கள். இவ்வாறு அந்தப் பதிவில் போஸ் வெங்கட் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே விஜய்யை விமர்சித்திருந்த போஸ் வெங்கட், விஜய் ஒரு ‘விளையாட்டுப் பிள்ளை’ போலத் தேர்தலுக்கு வந்துவிட்டதாகவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மக்கள் அவருக்கு உரிய தண்டனையை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். விஜய்யை ஒரு கிரிமினல் பின்னணி கொண்ட நபருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள போஸ் வெங்கட்டின் இந்தப் பேச்சு, தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இத்தகைய காரசாரமான விவாதங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை எகிறச் செய்துள்ளன.
