உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் குர்ஜா நகரில் உள்ள ஒரு ஜிம்மில், ஜித்து என்ற இளைஞரின் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில், அங்கிருந்த சிலர் விளையாட்டாக ஜித்துவின் முகத்தில் கேக்கை பூசியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த ஜித்து, தனது நண்பர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்தச் சாதாரண வாய்த்தகராறு முற்றி, இரு தரப்பினரும் தங்களது கைகளில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாகச் சுட்டுக்கொண்டனர்.
இந்தக் கோரத் தாக்குதலில் மணிஷ் சைனி, ஆகாஷ் சைனி மற்றும் அமர்தீப் ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த எஸ்.பி அந்தரிக்ஷ் ஜெயின் தலைமையிலான போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நேரத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் அந்தப் பகுதியே பதற்றத்தில் உள்ளது. தடயவியல் நிபுணர்கள் ஜிம்மில் சோதனையிட்டு வரும் நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய கேக் பூசும் விளையாட்டு, மூன்று உயிர்களைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
