கான்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ், வேதக் கல்வி பயில்வதற்காக லக்னோவில் உள்ள ‘ராமானுஜ பாகவத் வேத வித்யாபீடம்’ என்ற குருகுலத்தில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தான் சேர்க்கப்பட்டார். ஆனால், சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவன் படிக்கட்டில் இருந்து விழுந்துவிட்டதாகக் குருகுல நிர்வாகம் கூறிய நிலையில், சிறுவனின் உடலில் 42 இடங்களில் காயங்கள் மற்றும் சிகரெட் சூடு வைக்கப்பட்ட தழும்புகள் இருந்ததைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
விசாரணையில், குருகுல உரிமையாளர் சௌரப் மிஸ்ரா மற்றும் அவரது காதலி ஹர்ஷிதா சோனி ஆகிய இருவரும் சேர்ந்து சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கியது அம்பலமானது. சிறுவனை மின்விசிறி கூட இல்லாத ஒரு வெப்பமான அறையில் பூட்டி வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர்.
சிறுவன் உயிரிழந்ததும், யாருக்கும் தெரியாமல் அவரது உடலைக் கான்பூரில் உள்ள வீட்டின் வாசலில் போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். கைதான சௌரப் மிஸ்ரா, “எனக்குப் பெரிய அரசியல் செல்வாக்கு இருக்கிறது, 10 நாளில் வெளியே வருவேன்” எனத் திமிராகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
