சேலம் மாவட்டம் அருகே, கணவரால் கைவிடப்பட்டு தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சத்யா என்ற பெண், தனியார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராகப் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சத்யா தன்னிடம் சரியாகப் பேசாததால் ஆத்திரமடைந்த சக்திவேல், அவர் வேறு ஒருவருடன் பழகுவதாகச் சந்தேகப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட தகராறில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடினார்.இந்தக் கொடூரத் தாக்குதலில் சிறுவன் கிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சத்யாவின் மணிக்கட்டு துண்டான நிலையில், அவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய சக்திவேல், ஒரு காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒரு சிறுவன் கொல்லப்பட்டு, இரு குடும்பங்கள் சீரழிந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.