செங்கல்பட்டு மாவட்டம் அருகே, வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனைத் தந்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த மெத்தை தைக்கும் தொழிலாளி பெருமாள், தனது மகன் அஜித்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் இருந்ததைக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தந்தை என்றும் பாராமல் துணியால் பெருமாளின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்.இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகு, அஜித்குமாரே தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெருமாளின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற அஜித்குமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுப் பழக்கத்தால் பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.