தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணமான ஊதா மற்றும் மஞ்சள் நிறத்தைப் புறாக்கள் மீது பூசிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு பீட்டா இந்தியா (PETA India) அமைப்பு ஒரு காட்டமான கடிதத்தை எழுதியுள்ளது. அதில், “அரசியல் லாபத்திற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ வாயில்லாப் பிராணிகளைப் பயன்படுத்த வேண்டாம்; விலங்குகள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல” என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
புறாக்களின் சிறகுகளில் வேதிப்பொருட்கள் கலந்த வண்ணங்களைப் பூசுவது அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, மற்ற பறவைகளிடம் இருந்து அவற்றைத் தனிமைப்படுத்திவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் ஆர்வக்கோளாறால் செய்த இந்தச் செயல், தற்போது கட்சித் தலைமைக்குப் பீட்டா மூலம் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், இந்த விலங்குகள் நல விவகாரமும் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
