அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இரு நாடுகளின் தூதர்களையும் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இந்த உயர்மட்ட சந்திப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததாகவும், லெபனான் தன்னை ஹிஸ்புல்லாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அமெரிக்காவுக்கான லெபனான் தூதர் நடா ஹமாதே முவாத் மற்றும் இஸ்ரேலிய தூதர் யெச்சியேல் லைட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். தெற்கு லெபனானில் நிலவும் வன்முறையைக் குறைத்து, நீண்டகால அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இந்த போர்நிறுத்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை நேரில் சந்தித்து, இந்த ஆண்டிற்குள் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். “லெபனானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்” என்ற நம்பிக்கையுடன் இரு நாடுகளும் இந்த அமைதி முன்னெடுப்புகளைத் தொடர்ந்து வருகின்றன.