அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை ‘நரகக்குழி’ என்று விமர்சித்த ஒரு பாட்காஸ்டரின் பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையிலான இந்தக் கருத்துக்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் டிரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், இத்தகைய கருத்துக்கள் அறியாமையின் வெளிப்பாடு என்றும், தரம் தாழ்ந்தவை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இது நீண்டகாலமாக நிலவி வரும் இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் இருதரப்பு உறவின் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதமானதைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகம் நிலைமையைச் சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. டிரம்ப் இந்தியாவை ஒரு “சிறந்த நாடு” என்று கருதுவதாகவும், இந்திய உயர்மட்டத்தில் உள்ள தனது “நல்ல நண்பரின்” தலைமையை அவர் மதிப்பதாகவும் தூதரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இருப்பினும், இந்தியர்கள் குறித்துப் பகிரப்பட்ட அந்த இழிவான கருத்துக்கள் இந்தியத் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் இதுபோன்ற தர்மசங்கடமான கருத்துக்கள் தேவையற்ற விரிசலை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
