ஹார்முஸ் நீரிணையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க கடற்படைக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானியப் படகுகளைக் கண்டதும் சுட்டு வீழ்த்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சர்வதேச கடல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளைப் பதித்து வருவதாகவும், இது உலகளாவிய வர்த்தகத்திற்கும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம், அமெரிக்கக் கப்பல்களைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் ஈரானின் சிறிய ரகப் படகுகளைக் கூட தயக்கமின்றித் தாக்கி அழிக்க அமெரிக்கப் படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் ஈரான் பதித்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தப் பணிகளை வழக்கத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் மேற்கொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உத்தரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.