மகாராஷ்டிராவில் மே 1-ஆம் தேதி முதல் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், இனி வரும் நாட்களில் இது மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனை வரவேற்கும் விதமாக, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் மும்பையின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களில் “எனக்கு மராத்தி தெரியும், நான் மராத்தி பேசுவேன்” என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மும்பையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் ஓட்டுநர்கள் அரசின் இந்த முடிவைச் சரியானது என்று பாராட்டியுள்ளனர்.
அதே சமயம், இந்தத் திடீர் அறிவிப்புக்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விதிமுறை இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வந்து பிழைப்பு நடத்தும் ஓட்டுநர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என்றும், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் என்றும் தொழிற்சங்கத் தலைவர் ஷஷாங்க் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால், மே 4-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் மும்பையில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே பெரும் விவாதமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
