மத்தியப் பிரதேசத்தில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக மின்சாரத் துறை தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வழக்கமாக மின் இணைப்பைத் துண்டிப்பதோடு நின்றுவிடும் துறை, இப்போது ‘நிலுவைத் தொகை மீட்புச் சட்டத்தின்’ கீழ் வீடுகளுக்கே சென்று குளிர்சாதனப் பெட்டிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளது.
ஜபல்பூர், உஜ்ஜைன், மால்வா உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை தீவிரமடைந்துள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டணம் செலுத்தாதவர்கள் மீதே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஏப்ரல் 1, 2026 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளதால் எவ்வித சலுகையும் காட்ட முடியாது என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. கோடைக்காலத்தில் ஏழைகளின் வீடுகளில் இருந்து மின்சாதனப் பொருட்களைப் பறிமுதல் செய்வது அநீதி என்றும், அரசு அலுவலகங்கள் வைத்துள்ள பாக்கிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால், சட்டத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், பெரிய தொழிலதிபர்கள் முதல் சாதாரண நபர்கள் வரை அனைவருக்கும் சட்டம் சமம் என்றும் ஆளும் பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ‘சமாதான் யோஜனா’ போன்ற திட்டங்கள் மூலம் தவணை முறையில் பணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டும் கட்டணம் செலுத்தாதவர்களே தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, பறிமுதல் நடவடிக்கையைத் தவிர்க்க நுகர்வோர் உடனடியாகப் பாக்கிகளைச் செலுத்துவதே நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
