பெலகாவியின் ஷாகு நகரைச் சேர்ந்த அஞ்சனா தாமோனே என்ற முதியவர், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தும், அவர் தனது கடைசி நாட்களைத் தனிமையிலேயே கழித்துள்ளார். அவர் இறந்தவுடன் அக்கம் பக்கத்தினர் அவரது மகன்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

ஆனால், தாயின் மறைவைக் கேட்டு துயரமடைவதற்குப் பதிலாக, “நீங்களே அடக்கம் செய்துவிடுங்கள்” என்று அந்த மகன்கள் மனிதாபிமானமற்ற முறையில் பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெற்று வளர்த்த தாயின் இறுதிச் சடங்கிற்கு வரக்கூட மறுத்த மகன்களின் செயலால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மகன்கள் கைவிட்ட நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் முன்வந்து அஞ்சனாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.

பிள்ளைகள் இருந்தும் அநாதையாக மறைந்த அந்தத் தாயின் மரணம் மற்றும் அவரது மகன்களின் கல்நெஞ்சமான செயல் தற்போது வெளியாகி பெலகாவி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.